மனதின் நெடுமரத் தீவு
கூடுகள் பலவும் தேனடையோடு
கற்பகோடிக் காலம் சிரிக்கும் கடலலைகள்
புல்விதைகளைப் பயிரிடும்போது
கல்விதைகள் முளைத்து விடுகின்றன
தொலைவில் பாய்மரங்கள்
கரையில் கிளிஞ்சல்கள்
யாரும் குடிவரும் தீவுதான்
அவைகளாகத்தான் வெளியேற வேண்டும்
நெடுமரங்கள் இலைகளை உதிர்த்துவிடும்போது
தேனும் தீர்ந்து பறவைகள் பறந்து விடுகின்றன
அடையையும் கூட்டையும் தாலாட்டும் காற்று
தனிமரம் தோப்பாகாது தான்
விச்ராந்தியாகத்தான் இருக்கிறது தீவு
கடல் மட்டம் உயரும்போது தாழும்போதும்.

Comments are closed.