இரவுகளை இசைப்பவன் ஒருவனோடு
பழத்தோட்டத்தில் உரையாட நேர்ந்தது
அவன் காதல் ஒரு பழைய சங்கீதம் என்றும்
அது பல துளைகள் கொண்ட புல்லாங்குழல்களில்
இருந்து உருவாகுவதாகவும் கூறினான்
ஓரிரண்டு பழங்கள் உதிர்ந்தவண்ணமிருந்தன
தத்துவம் விழுந்துவிடுகிறது
தளிர்கள் துளிர்ந்துவிடுகின்றன
எனப் புன்னகைத்துக் கொண்டான்
மரங்கள் பற்றி நெடுநேரம் பேசினான்
வயதை மீறியதொரு அனுபவம்
காதலுக்குப்பின் வெளியேறிய இருப்பு
இறப்பதற்கு முன் இறுதியாகக் கேட்ட ஓசை
உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான்
ஒரு புல்லாங்குழல் போதும் என்றேன்
பழையதா புதியதா என்றான்
கிளைகள் துளிர்த்துவிடாத புதியது என்றேன்

Comments are closed.