பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” எனும் தேசியக்கருத்தரங்கு 27.09.2016 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கிற்குத் தலைமையேற்று கருத்தரங்க ஆய்வுக்கோவையான “தன்னம்பிக்கைத் தமிழ்” எனும் ஆய்வுநூல்களின் மூன்றுதொகுதிகளை வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார்.
கவிஞரும் வணிகவரித்துறை இணை ஆணையாளருமான பா. தேவேந்திர பூபதி அவர்கள் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்தரங்கச் சிறப்புரையாற்றினார்.
தமிழால் எல்லாம் முடியும்
அவர் தமது சிறப்புரையில் “ எல்லாம் தமிழால் முடியும் என்ற எண்ணம் தமிழ் பயிலக்கூடிய மாணவர்களிடையே உருவாகியிருக்கிறது. அரசுதவி பெறாப் பாடப்பிரிவிலும் ஆர்வமாக தமிழ்பயிலத்தொடங்கியிருக்கிறார்கள் என்பது தமிழ் வளர்ச்சிக்கு நல்ல அடையாளமாகக் கொள்ளமுடிகிறது.
தமிழை அடுத்ததலைமுறை மாணவர்களிடம் கொண்டுசெல்லக்கூடிய உயரிய பணியினை இக்கல்லூரித் தமிழ்த்துறை சிறப்பாகச் செய்துவருகிறது.முத்தமிழ் என்று இருந்த நிலையை மாற்றி தன்னம்பிக்கைத் தமிழ் என்கிற புதியவகைமையை இக்கல்லூரித் தமிழ்த்துறை முன்னெடுத்திருக்கிறது.
தமிழ் இலக்கியம் தன்னம்பிக்கையை வளர்கிறது. திருக்குறளும், பாரதியின் ஆத்திசூடியும், தேவாரமும், சீறாப்புராணமும் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்கிற சிந்தனையை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.
உலகின் உயரிய இலக்கியக்கோட்பாடுகள் தோன்றும் முன்னரே தமிழ் அதைத் தெளிவாக விளக்கி இருக்கிறது. தமிழ் மொழி என்பதையும் தாண்டி உலகத் தமிழர்களுக்கு இன்று அடையாளமாய் மாறியிருக்கிறது.
நவீனக்கவிதைகளின் வேராகத் தமிழின் தொன்மையான சங்கஇலக்கியம் திகழ்கிறது. தமிழ் வழியில் பயின்றால் சுயசிந்தனையை ஊற்றெடுக்க வைத்து அறிஞனாக மாற்றுகிறது.சதாவதானி செய்குதம்பிபாவலர் ஒரேநேரத்தில் நூறு அவதானங்களைச் செய்து தன்னம்பிக்கையின் அடையாளமாய் தமிழை மாற்றினார்.தமிழ் பயின்ற தமிழரால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அவரே சான்றாகத் திகழ்ந்தார்.” என்று பேசினார்.
Source : https://goo.gl/j7opkj
Comments are closed.