இருபத்தி மூன்று வருடங்களை
வீடும் கல்விச் சாலையும் தேர்வுகளும்
தின்று விட்டன
எந்த மயக்கமும் அற்று மனைவி இப்போது
தோழியாகி விட்டார்
பிள்ளைகளும் புரதச்சத்து வேண்டி
பயிறுகள் விளையும் பூமிக்கருகில்
குடியிருக்கிறோம்
மாமிசத்தை பரிந்துரைக்கும் உலகம்
பாவ புண்ணியங்களையும் உபதேசிக்கிறது
ஆரோக்கியமும் காதலும்
பிறவியை அக்கரைக்கு கடத்துகின்றன
கதவுகளின் தாழ்பாள் தேய்ந்து போகும்படிக்கு
சகோதரத்துவம் விருந்தில் திளைக்கிறது
மிகச் சிக்கனமாகவா ஒரு நகரத்தை
நிர்மாணிக்கிறார்கள்
நோயாளியை மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் வாகனங்கள் போலவே
அரசியல் மனிதர்களையும் ஒலியெழுப்பி
வழி திருத்திக் கொண்டு போகின்றன நகரங்கள்
மீதி இருபத்தி மூன்று வருடங்களை
தந்தையிடமிருந்து விடுவித்துக் கொண்டவன்
தன்னுணர்ச்சியில் இருக்கிறான்
இப்படியெல்லாம் எனக்கிருக்கிறது உலகப்பற்று
கேட்டுக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த
விருது பெற்ற இலக்கியவாதி ஒருவேளை
தனக்குள் சிரித்துக் கொண்டும் இருப்பார்.

Comments are closed.