இத்தனை காதலிலும்
நகரத்திற்கான சாலை விதிகள்
உன் கண்களில் தெரிகிறது
பேரிரைச்சலுக்கு மத்தியில்
இந்தச் சிறிய மலரை நான் உனக்கு முன் நீட்டுவது குறித்து
வேகமாய் எதிர்நடைபாதைக்கு வந்த நீ
என்னதான் சொல்ல முடியும்
நெருக்கடியில் பலர் உன்னை இடித்துவிட்டுச் செல்கிறார்கள்
நான் வெளியேற வேண்டுமெனில்
அலுவலகத்தின் ஆண்டுத் தணிக்கை முடியவேண்டும்
உனக்கு எப்போதும் இருட்டுமுன் வீடு
நீளமான நகங்களின் சாயப்பூச்சை இம்மரத்தடியில்
நான் பவளம் என வியப்பதும்
கமழும் எனதுடலின் நறுமணத் திரவியத்தின்
பெயர் கேட்டு நீ நிர்பதும்
நெடுநாள் பழுது பார்க்கப்படாத மணிக்கூண்டின்
இரண்டு முட்கள் போல அருகருகே உறைந்து தோன்றுகிறது
பேசிய இத்தனை சொற்களிலும்
இந்த மரங்கள்
அதன் மலர்கள் அந்தி கவிழும் இருளில்
வாகன நிறுத்தங்களின் மறைவு
மறுபடியும்
இந்த நகரம் நம்மை அடையாளமற்று ஒளியில் மூழ்கடிக்கிறது.

Comments are closed.