விழியின் வீச்சுக்குள்
சிக்காமலே நகர்ந்துகொண்டிருக்கின்றன
சில பிம்பங்கள்
கடிதங்களுக்கான காத்திருப்பு
இருந்து கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு விடியலிலும்
இதுவரை
எழுதப்படாத கவிதைபோல்
யதார்த்தம் நிச்சயிக்கப்படாத
பொழுதுகளில்
பருவமாற்றத்தைப் புகுத்தி
உரிக்கப்படுகிறது தோல் சட்டைகள்
இருள் மண்டிக் கிடக்கும் எல்லாப் புதரிலும்
உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்
யாரோ ஒருவர்
வசீகரிக்கப்படாமலேயே
கடந்து போகின்றது இரவும் பகலும்
சொட்டுச் சொட்டாய் விழுகின்ற நீரில்
கரைந்துகொண்டிருக்கிறதென் சுயம்
உயரே தெரிவது
கால் கடுக்க ஏறிய பின்னும்
முடி காண முடியாதபடி
நிஜங்களுக்கப்பாலும் இருக்கக்கூடும்
விழியை விலக்கி
நிகழ்வுகளை மென்று தின்னும்
பறவையின் சிறகு மறைத்து
பறக்கச் சித்தமாகும் வாழ்வு.

Comments are closed.