எனது நிலத்தில் உள்ள
மலர்களின் பெயர்களை
உங்களுக்குச் சொல்லுவேன்
அதன் அழகிய நீரூற்றுக்களையும்
காய்கனி பயிர்களோடு
ஒரு கலாச்சாரத்தையும்
அதன் பாடல்களையும்
நீங்கள் ரசிக்கும்போது
வாழ்வின் உன்னதங்களை
அதன் அமைதிபற்றிய தத்துவத்தை
ஒரு தொலைதூர நிலவொளியாக
நீங்கள் அனுவித்து மகிழலாம்
பிறகு எங்கள் நீரூற்றுகளை
விலைப்படுத்தியவர்களையும்
தானியங்களை சுவீகரித்து
உடல்களைக் கிடங்குகளில்
சமைய வைத்தவர்களையும்
மலர்களைச் சொன்னவனுக்கு
நோய்களைப் பரிசளித்ததையும்
ஆடைகளைப் பரித்துக்கொண்டவர்களையும்
நீங்கள் அடையாளம் காட்டவேண்டும்
எங்கள் பாடல்களை இசைத்தட்டுகளாக்கி
நடனமாடிப் பருகும் மதுவில்
எங்கள் உதிரத்தை உறிஞ்சும்
நிகழ்விற்கு நீங்கள் சாட்சியாக இல்லையெனில்
மிகக் கொடுமைதான்
அதைவிடவும் கொடுமை
ஒரு தொலைதூர நிலத்தை
உங்களிடம் காட்டிக் கொடுத்தது

Comments are closed.