தீராத காதல் ஒன்றுமில்லை
அந்தப் பெண்கள் இனிப்பைச் சுவைக்கும்போது
கறுத்த முகத்துடன் அவன் வீற்றிருந்தான்
தொண்டையில் பேசுவதற்கான
ஆங்கில வார்த்தை உருவாகிக் கலைகிறது
ஒருபாதி உலகத்துடன் தொடர்பற்றவனாய்
மதிப்பிற்குரிய அன்பொன்றுக்காக
மழைநாளின் தெருவொன்றில்
கனவுகளுடன் வசிக்கிறான்
அவர்கள் சில தின்பண்டங்களை வாங்கிக் கொண்டும்
ஒருத்தி கைபேசியில் தனியே ஒதுக்கியிருக்க
அவன் வேண்டுமென்றே ஏதோ ஒன்றின்
விலை விசாரிக்கிறான்
அவர்கள் அன்பற்றவர்கள் போலவும்
பல ஆண்களைக் கடந்து வந்தவர்கள் போலவும்
தாங்களாகவே வாழ்வது போலவும் இயங்கினார்கள்
பின்னப்படாத கேசங்கள் காற்றில் அலைய
ஆடைகள் உரசும்படி அவனைக் கடந்தார்கள்
அவர்கள் திரும்பப் போவதில்லை
வீடுதிருப்பும் நகரப் பேருந்தில்
அவன் மட்டும் தனியே
இடை நிறுத்தத்தில் ஒரு சிறிய பெண்
கூந்தலில் மலர்கள் இல்லாமல்
தூரத்து இருக்கையில் முகம் திருப்பாமல்
இறுதி நிறுத்ததில் இருவரும் இறங்க
சில அடிகளுக்குப் பின்னால் தொடர்ந்தவன்
நிலவொளியில் மிக மெதுவாக
‘கராமி’ என அழைத்தான்
இந்த வெண்ணிரவில் அவள் நடை திகிலூட்டும்படி
சடுதியாய் இருந்தது

Comments are closed.